திங்கள், 18 மே, 2015

புறம்போக்கு என்கிற பொதுவுடைமை...



முதலில் இது பகத்சிங்கின் வரலாறு அல்ல.. அந்த மாவீரனை தன் முன்மாதிரியாக கொண்ட ஒரு போராளியின் கதை..

ஆர்யாவுக்கு வைக்கப்பட்ட பாலு என்கிற பெயர் மட்டுமே ஜனநாதனை கொண்டாட போதுமானதாய் இருக்கிறது எனக்கு.. அந்த உச்சகட்ட காட்சியில் இரண்டு கைகளும் பின்னால் கட்டப்பட்ட நிலையில், மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட்  கம்யுனிஸ்ட் கட்சி அலுவலக வாசலில் கம்பீரமாக நிற்கும் தூக்குமேடை தியாகி பாலுவின் உருவம் கண்களில் தோன்றி மறைந்தது எனக்கு மட்டும் அல்ல என நம்புகிறேன்...

தூக்கிலிடும் தொழிலாளியாக வந்து அதன் வழியை நமக்குள் கடத்திய விஜய் சேதுபதி முக்கியமான பாத்திர படைப்பு... தூக்கிலிடுபவரின் குறிப்புகளாக படித்த ஜனார்த்தனம் பிள்ளையின் வாழ்க்கை நினைவுகளை முன்னால் நிறுத்துகிறது...

மெக்காலே ஷாம் அசத்துகிறார்... அரசியலமைப்பு சட்டத்தின் நகலாக அல்ல... ஆள்வோரின் வேட்டை நாயாக நம் கண்முன் வாழும் அல்லது அப்படி வளர்க்கப்படும் மிருகங்களின் திரை முகம் இது...

குயிலி என்ற கார்த்திகா, எமலிங்க்கதின் காதலை கடந்து செல்வது மிக முக்கியமான காட்சிகள்... ராணுவ தாக்குதலுக்கு முந்தைய நாள் குயிலியும், பாலுவும் ஆடிப்பாடும் அந்த நடனம் தோழமையின் மிச்சம்.. அதை காதலென அர்த்தப்படுத்துவோர் இந்திய மாணவர் சங்கத் தோழர்களிடம் பாடம் படித்தல் நலம்.

தமிழ்தேசியம் குறித்த ஜனநாதனின் விமர்சனம் மிக முக்கியமானது... அந்த துணிச்சலுக்கு ஒரு லால் சலாம் காம்ரேட்.

இன்னும் இன்னுமாய் பேசி தீர்க்க வேண்டிய விஷயங்கள் படம் குறித்து நிரம்பி கிடக்கின்றன... ஆப் கி மோடி சர்க்காரின் சென்சாரை தாண்டி இந்த சினிமா வெளிவந்தது சாதாரண முயற்சியல்ல... அதற்கு பின்னால் நிறைந்து வழிகிறது ஜனநாதன் சுமந்த வலி... அதை பாராட்டா விடினும் கொச்சை படுத்த வேணாம்...

எல்லாவற்றையும் மீறி மனதை விட்டு அகல மறுக்கிறாள் எமலிங்க்கதின் தாய்...

எப்படி இருந்தா என்ன டா... நம்ம வீட்டுக்கு வந்து குடும்ப போனா ஆகிட்டு போறா... கிரேட் அம்மா....


ரெட் சல்யுட் காம்ரேட்....

வியாழன், 2 ஏப்ரல், 2015

தீரா காதல்....



அர்த்தமற்ற
கோபங்கள்...
வலிக்க வைக்கும்
வார்த்தைகள்...
உள்ளம் உதிர்க்கும்
கண்ணீர்...
யாவற்றுக்கும் பின்னால்
உயிரின் வேரிலிருந்து
எழுந்து நிற்கிறது
ஒரு தீரா காதல்....

திங்கள், 16 மார்ச், 2015

பிதாவே தயவு செய்து இவர்களை மன்னித்து விடாதேயும்....



மேற்கு வங்கத்தில் அந்த துயரம் நிகழ்ந்துள்ளது என்பது தான் அச்சத்தை மேலும் மேலும் அதிகரிக்கிறது.

72 வயது கிறிஸ்தவ பெண் துறவி 5 மிருகங்களால் சிதைக்கப்பட்டிருக்கிறார்...

இடதுசாரிகளின் 30 ஆண்டு கால ஆட்சியில், பறந்து விரிந்து கிடந்த மதசார்பின்மையின் நிழலில் நிம்மதியாய் உறங்கி கிடந்த மாநிலத்தில் தன ஒரு நள்ளிரவில் இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. அங்கு இருந்து தான் அவர்கள் இப்போது எழுகிறார்கள். அவர்கள் அங்கிருந்து எழுகிறார்கள் என்பதே  அச்சத்தை அதிகரிக்கிறது...

யார் அந்த 5 பேர்.?

5 பேருக்கும் 16 வயதிலிருந்து 25 வயதுக்குள் தான் இருக்கும் என்கிறது ஒரு பத்திரிகை செய்தி. 

பாதிக்கப்பட்டவரின் வயதும், குற்றவாளிகளின் வயதுமே குற்றத்தின் நோக்கம் பாலியல் வன்கொடுமை அல்ல என்பதை நமக்குணர்த்த போதுமானதாய் இருக்கிறது...

கிறிஸ்தவர் என்ற அடையாளத்தை சிதைக்க வேண்டும் என்பதும், அந்த அடையாளத்தை கொண்டிருப்பவர்களை அச்சுறுத்த வேண்டும் என்பதும் மட்டுமே அவர்களின் நோக்கமாக இருந்திருக்கிறது.

அதனால் தான் அந்த துறவியின் முதுமை கூட கண்களை மறைத்து, கிறிஸ்தவர் என்பது மட்டும் அவர்களை உறுத்தியிருக்கிறது...

இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்களில் அவர்கள் நிறைமாத கர்ப்பிணிகளை கூட விட்டுவைக்கவில்லை என்பதை இதோடு இணைத்து பார்க்க வேண்டும்...

திமிரையும், கொழுப்பையும் உடலிலும், வன்மத்தையும், வக்கிரத்தையும் மனதிலும் பூசிக்கொண்டு திரிகிற ஒரு கூட்டம் தேசம் முழுக்க இறக்கிவிடப்பட்டுள்ளது.

அவர்களே மசூதிகள் வெறும் கட்டடம் என்கிறார்கள்.
பாகிஸ்தானுக்கு ஓடுங்கள் என்கிறார்கள்.
மாட்டிறைச்சி தின்னாதே என்கிறார்கள்.
அரியானாவில் பகவத் கீதையை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்கிறார்கள்..


இன்னும் என்ன என்னமோ அவர்கள் சொல்லி கொண்டே இருக்கிறார்கள்...

ஆனால் மனிதத்தை காக்க வேண்டியவர்கள் கள்ள மவுனம் காத்து கொண்டு, அல்லது செயல் படுகிறவர்களையும் நோட்டை சொல்லி கொண்டு திரிகிறார்கள்...

பிதாவே தயவு செய்து இவர்களை மட்டும் மன்னித்து விடாதேயும்....

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

ஒற்றை காரணம் நீ...



அடர்ததியின் பரப்பை
அதிகமாக்கி கொண்டே
போகிறது உன் காதல்...

எனக்கானவற்றை
புரிந்து வழங்க
நீயெடுக்கும் அக்கறையில்
தன்னை தானே
புதுப்பித்து கொள்கிறது
என் காதல்...

என் வாசிப்பின் வெளி
விரிந்து பறந்ததற்கான
ஒற்றை காரணம் நீ...

பெருத்த வாசிப்பின் பலனாய்
கதைகள் எழுதவும்
துணிகிறேன்...

அந்த கதைகளில்
நீயின்றி போகலாம்....

அது கதைகளாய் எழுவதற்கு
நீயே
நீ மட்டுமே காரணம்....

சனி, 24 ஜனவரி, 2015

காலமும் நிரப்பப்பட்ட காகிதங்களும் காத்திருக்கின்றன.....



திடிரென ஒரு நாள் பிரிட்ஜெட் கேட்டாள்... உன் கடந்த ஆண்டு சபதம் என்ன ஆயிற்று என்று..

அந்த சபதம் மெல்ல நிழலாட தொடங்கியது.. புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வாடிக்கை ஆக்கிவிட வேண்டும் என்பது அந்த சபதம்... அதற்காகவே 2014 புத்தக கண்காட்சி சென்று புத்தகங்களையும் அள்ளி வந்தேன்..

நீண்ட நாட்களாக இடை நின்று விட்ட பழக்கத்தை மீட்டெடுக்க வேண்டும்... என்ன செய்வது.. புதிய திட்டம் உருவானது..

வருடத்தின் 365 நாட்களும் தினசரி 10 பக்கங்கள்... 65 நாட்கள் தவற விட்டு விட்டாலும் ஆண்டு இறுதிக்குள் மூவாயிரம் பக்கங்கள் வாசித்து முடித்து விட வேண்டும் என்பது இலக்கு... இதில் வார, மாத இதழ்களை சேராது....

திரும்பி பார்க்கையில் ஆச்சர்யமாய் இருக்கிறது.. ஓராண்டுக்கென திட்டமிட்டதை 4 மாதங்களில் முடித்து விட்டேன்... அடுத்து...? யோசிக்க விடவில்லை புத்தகங்கள்.. நதியின் திசையில் செல்லும் தக்கையை போல புத்தகம் சென்ற வழியெல்லாம் வெறிகொண்டு அல்ல... காதல் கொண்டு ஓடினேன்..

2015 தொடக்கத்தில் நின்று திரும்பி பார்க்கையில் வியப்பாய் இருக்கிறது... 10 ஆயிரம் பக்கங்களை கடந்து நிற்கிறேன்..

படித்ததில் அர்த்தமற்ற புத்தகங்கள் என எதுவுமில்லை... அத்தனையும் மாணிக்கங்கள்... பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் தொடங்கி எதிரொலிக்கும் கரவொலிகள் வரை அத்தனையும் அற்புதம்....

வாங்கி படித்த புத்தகங்கள் போதாமல் போன போது, வீரம் விளைந்தது, இந்திய கம்யுனிஸ்ட் இயக்க வரலாறு தொடங்கி துக்கிலிடுபவரின் குறிப்புகள் வரை அற்புத இலக்கியங்களை அள்ளி தந்தது மக்கள் தொலைகாட்சி நூலகம்... கறுப்பர் நகரத்தையும். குருப்ஸ்காவையும் கொடுத்தார் முத்தழகன், இன்னும் ஜெயபாதுரி கொடுத்த நூல்கள்... என நீள்கிறது அந்த பட்டியல்....

அனைவருக்கும் நன்றிகள்....

ஏராளமான வாசிப்பு எழுதுவதற்கான வாசலையும் திறந்து விட்டுள்ளது... அது இந்த ஆண்டு இதிலிருந்து தொடங்கும் என நம்புகிறேன்...

தற்போது இலக்கு மாறியிருக்கிறது... 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் பக்கங்கள்... நிறைய உலக சினிமா என விரிவடைந்திருக்கிறது...

பார்க்கலாம்...
காலமும் நிரப்பப்பட்ட காகிதங்களும் காத்திருக்கின்றன.....