சனி, 24 ஜனவரி, 2015

காலமும் நிரப்பப்பட்ட காகிதங்களும் காத்திருக்கின்றன.....



திடிரென ஒரு நாள் பிரிட்ஜெட் கேட்டாள்... உன் கடந்த ஆண்டு சபதம் என்ன ஆயிற்று என்று..

அந்த சபதம் மெல்ல நிழலாட தொடங்கியது.. புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வாடிக்கை ஆக்கிவிட வேண்டும் என்பது அந்த சபதம்... அதற்காகவே 2014 புத்தக கண்காட்சி சென்று புத்தகங்களையும் அள்ளி வந்தேன்..

நீண்ட நாட்களாக இடை நின்று விட்ட பழக்கத்தை மீட்டெடுக்க வேண்டும்... என்ன செய்வது.. புதிய திட்டம் உருவானது..

வருடத்தின் 365 நாட்களும் தினசரி 10 பக்கங்கள்... 65 நாட்கள் தவற விட்டு விட்டாலும் ஆண்டு இறுதிக்குள் மூவாயிரம் பக்கங்கள் வாசித்து முடித்து விட வேண்டும் என்பது இலக்கு... இதில் வார, மாத இதழ்களை சேராது....

திரும்பி பார்க்கையில் ஆச்சர்யமாய் இருக்கிறது.. ஓராண்டுக்கென திட்டமிட்டதை 4 மாதங்களில் முடித்து விட்டேன்... அடுத்து...? யோசிக்க விடவில்லை புத்தகங்கள்.. நதியின் திசையில் செல்லும் தக்கையை போல புத்தகம் சென்ற வழியெல்லாம் வெறிகொண்டு அல்ல... காதல் கொண்டு ஓடினேன்..

2015 தொடக்கத்தில் நின்று திரும்பி பார்க்கையில் வியப்பாய் இருக்கிறது... 10 ஆயிரம் பக்கங்களை கடந்து நிற்கிறேன்..

படித்ததில் அர்த்தமற்ற புத்தகங்கள் என எதுவுமில்லை... அத்தனையும் மாணிக்கங்கள்... பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் தொடங்கி எதிரொலிக்கும் கரவொலிகள் வரை அத்தனையும் அற்புதம்....

வாங்கி படித்த புத்தகங்கள் போதாமல் போன போது, வீரம் விளைந்தது, இந்திய கம்யுனிஸ்ட் இயக்க வரலாறு தொடங்கி துக்கிலிடுபவரின் குறிப்புகள் வரை அற்புத இலக்கியங்களை அள்ளி தந்தது மக்கள் தொலைகாட்சி நூலகம்... கறுப்பர் நகரத்தையும். குருப்ஸ்காவையும் கொடுத்தார் முத்தழகன், இன்னும் ஜெயபாதுரி கொடுத்த நூல்கள்... என நீள்கிறது அந்த பட்டியல்....

அனைவருக்கும் நன்றிகள்....

ஏராளமான வாசிப்பு எழுதுவதற்கான வாசலையும் திறந்து விட்டுள்ளது... அது இந்த ஆண்டு இதிலிருந்து தொடங்கும் என நம்புகிறேன்...

தற்போது இலக்கு மாறியிருக்கிறது... 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் பக்கங்கள்... நிறைய உலக சினிமா என விரிவடைந்திருக்கிறது...

பார்க்கலாம்...
காலமும் நிரப்பப்பட்ட காகிதங்களும் காத்திருக்கின்றன.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக